கடன் தள்ளுபடி வாக்குறுதிகளை நம்பாதீங்க... ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கிய பொதுமக்களைக் குறிவைத்துச் சில மோசடி அமைப்புகள் கடன் தள்ளுபடி செய்வதாகக் கூறி ஏமாற்றி வருகின்றன. இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், அங்கீகரிக்கப்படாத நபர்கள் அல்லது அமைப்புகளின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது. இத்தகைய அமைப்புகள் மக்களைத் தவறாக வழிநடத்தி நிதி இழப்பை ஏற்படுத்துவதாக ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளது.
இந்த மோசடி கும்பல்கள், வங்கிகளில் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை என்று கூறி மக்களை நம்ப வைக்கின்றனர். அதற்காகச் 'சேவைக் கட்டணம்' அல்லது 'சட்டக் கட்டணம்' என்ற பெயரில் பெரிய தொகையைப் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கின்றனர். மேலும், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி போலியான கடன் தள்ளுபடி சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்கள். இத்தகைய போலி சான்றிதழ்களுக்கு எவ்வித சட்டப்பூர்வ அங்கீகாரமும் கிடையாது என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.
பொதுமக்கள் தங்களின் கடன் தொடர்பான விபரங்களை அறிய நேரடியாகச் சம்பந்தப்பட்ட வங்கிகளையோ அல்லது நிதி நிறுவனங்களையோ அணுக வேண்டும். எக்காரணம் கொண்டும் கடன் தள்ளுபடி பெற்றுத் தருவதாகக் கூறும் மர்ம நபர்களிடம் பணத்தையோ அல்லது தனிப்பட்ட விபரங்களையோ பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவே ரிசர்வ் வங்கி இந்த விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.