வதந்திகளை நம்பாதீங்க... மீட்டரிங் மறுஆய்வில் 0.65% இணைப்புகளில் மட்டுமே மின்கட்டண வேறுபாடு!
மின்கட்டணக் கணக்கீடு குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட சிறப்பு மீட்டரிங் மறுஆய்வுப் பணியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இணைப்புகளில் மட்டுமே கட்டண வேறுபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக நடைபெற்ற சிறப்பு மறுஆய்வுப் பணியில் இதுவரை 15,323 மின் இணைப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 100 மின் இணைப்புகளில் மட்டுமே (அதாவது 0.65 சதவீதம்) மீட்டரிங் பதிவு மற்றும் கட்டணத்தில் வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வேறுபாடுகள் கண்டறியப்பட்ட இணைப்புகளுக்குக் கள ஆய்வின் அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு மின்கட்டணம் உடனடியாகத் திருத்தி அமைக்கப்படும்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 3.70 லட்சம் மின் இணைப்புகளில் இந்தச் சிறப்பு மின்கட்டணக் கணக்கீட்டு மறுஆய்வுப் பணிகளை மேற்கோள்ளத் திட்டமிடப்பட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இச்செயல்பாடு மின்கட்டணக் கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மின்கட்டணம் தொடர்பாகச் சந்தேகங்கள் இருப்பின் அருகிலுள்ள மின்வாரிய அலுவலகங்களையோ அல்லது 'மின்னகம்' (94987 94987) உதவி மையத்தையோ தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெறலாம் எனத் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூடுதல் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.