undefined

வதந்திகளை நம்பாதீங்க... ஐயா நல்லகண்ணு உடல்நிலை சீராக இருக்கு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்!

 

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆர். நல்லகண்ணு (101) அவர்களின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைமை நேற்று இரவு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.

101 வயதான நல்லகண்ணு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது, வயது மூப்பு காரணமாகச் சில நேரங்களில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். இருப்பினும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்காகத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு உடல் ஒத்துழைப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மணிநேரங்களாகச் சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்துத் தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவி வந்தன. இது தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், "தவறான செய்திகளை நம்ப வேண்டாம்; ஐயா நல்லகண்ணு அவர்கள் சிகிச்சையில் நலமுடன் உள்ளார்" என்று கட்சித் தலைமை தெளிவுபடுத்தியுள்ளது.

நேற்று இரவு வரை கிடைத்த தகவலின்படி, அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. 101 வயதிலும் மனவலிமையுடன் விளங்கும் அவர், விரைவில் பூரண நலம்பெற வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.