மறந்துடாதீங்க... ஜூன் 30 கடைசி நாள்... கேஸ் சிலிண்டர் நுகர்வோருக்கு முக்கிய அறிவிப்பு ; இ-KYC செய்வது எப்படி?

 

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தை முறைப்படுத்தவும், போலி இணைப்புகளை ஒழித்து மானிய முறைகேடுகளைத் தடுக்கவும் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளன. இதன்படி, இண்டேன், பாரத் கேஸ் அல்லது ஹெச்பி கேஸ்  என எந்தவொரு நிறுவனத்தின் சமையல் எரிவாயு இணைப்பைக் கொண்டிருந்தாலும், நுகர்வோர் அனைவரும் தங்களது எரிவாயு கணக்குடன் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு அல்லது இ-KYC முறையை நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நேரடி மானியப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், சிலிண்டர்களுக்கான மத்திய அரசின் மானியத் தொகையைத் தொடர்ந்து தடையின்றித் தங்களது வங்கிக் கணக்கில் பெற விரும்புவோர் அனைவரும் வரும் ஜூன் 30, 2026-க்குள் இந்த இ-KYC செயல்முறையை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தத் தேதிக்குப் பிறகும் இ-KYC செய்யாத நுகர்வோரின் கேஸ் மானியம் தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

நுகர்வோர் தங்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே மிக எளிதாக இந்தச் சரிபார்ப்பைச் செய்ய மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. நுகர்வோர் தங்களது எரிவாயு நுகர்வோர் அட்டை, ஆதார் அட்டை மற்றும் எரிவாயு இணைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் போன் ஆகியவற்றுடன் தங்களது உள்ளூர் கேஸ் விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரில் செல்லலாம். அங்குள்ள பயோமெட்ரிக் கருவியில் கைரேகை அல்லது கண் விழி ஸ்கேன் செய்வதன் மூலம் சில நிமிடங்களில் இ-KYC நிறைவு செய்யப்படும்.

இந்தியன் ஆயில் ஒன், ஹலோ பிபிசிஎல்  அல்லது ஹெச்பி பே ஆகிய அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகளைப் பதிவிறக்கம் செய்து, மத்திய அரசின் 'ஆதார் பேஸ் ஆர்டி'  செயலியின் உதவியுடன் முகத்தை ஸ்கேன் செய்தும் வீட்டிலிருந்தபடியே இ-KYC-ஐ முடிக்கலாம்.

சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர்களிடம் உள்ள பிரத்யேக மொபைல் செயலிகள் மூலமாகவும் நுகர்வோர் தங்களது கைரேகையைப் பதிவு செய்து இ-KYC செய்துக் கொள்ளலாம்.

பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு பெற்றவர்கள் மட்டுமின்றி, பொதுப் பிரிவில் சிலிண்டர் மானியம் பெறும் அனைத்து நுகர்வோரும் இந்தச் சரிபார்ப்பைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

வீட்டு உபயோக சமையல் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும், வணிக ரீதியிலான சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.