விசாரணைக்கு அழைக்கும் நபர்களைத் துன்புறுத்தக் கூடாது - உயர்நீதிமன்றம் உத்தரவு!

 

காவல்துறையினர் விசாரணைக்காக அழைக்கும் நபர்களை எவ்வித துன்புறுத்தலுக்கும் ஆளாக்கக் கூடாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அதற்கான முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களுக்கு உரிய தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு முறையான சம்மன் அனுப்ப வேண்டும். சம்மன் இன்றி எவரையும் விசாரணை என்ற பெயரில் நேரில் அழைப்பதோ அல்லது அலைக்கழிப்பதோ கூடாது.

விசாரணையின் போது சம்பந்தப்பட்ட நபர்களை எந்தவிதமான உடல் ரீதியான அல்லது மன ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதமாகக் காவலில் வைப்பது மற்றும் அலைக்கழிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும், காவல்துறையின் விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதிசெய்யும் வகையிலும் இந்த உத்தரவு அமைந்துள்ளது.