மனசாட்சியே இல்லையா? திருவொற்றியூரில் மூதாட்டியிடம் 'டம்மி' நோட்டு கொடுத்து மோசடி!
கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் விற்று வந்த மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் போலி ரூபாய் நோட்டைக் கொடுத்து ஏமாற்றிச் சென்ற சம்பவம் சென்னை திருவொற்றியூரில் அரங்கேறியுள்ளது.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம் மூதாட்டி ஒருவர் கூடை வைத்து மாம்பழம் விற்று வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு பெண், மாம்பழங்களை வாங்கிக்கொண்டு, அதற்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்துள்ளார். அந்த நோட்டைப் பெற்றுக்கொண்ட மூதாட்டி, மீதிப் பணத்தையும் கொடுத்து மாம்பழங்களை அந்தப் பெண்ணிடம் வழியனுப்பியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து அந்த நோட்டைச் சரிபார்த்தபோது, அது உண்மையான 500 ரூபாய் நோட்டு அல்ல என்பதும், குழந்ததைகள் விளையாடும் 'Children Bank of India' என்று அச்சிடப்பட்ட 'டம்மி' நோட்டு என்பதும் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த மூதாட்டி, தனது நாள் முழுவதுமான உழைப்பும், முதலீடும் பறிபோனதை எண்ணி நடுரோட்டிலேயே அமர்ந்து கதறி அழுதார்.
சுற்றியிருந்தவர்கள் அந்தப் போலி நோட்டைப் பார்த்துவிட்டு அது செல்லாது என்று கூறியபோது, "பாவி மகள் இப்படி பண்ணிட்டாளே" என அழுதுகொண்டே அந்த மூதாட்டி கூறியது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது. இந்தச் சம்பவத்தை அவ்வழியாகச் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது.
கடும் வெயிலில் கஷ்டப்படும் முதியவர்களிடம் கூட இத்தகைய கீழ்த்தரமான மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அந்த மூதாட்டிக்கு உதவப் பலரும் முன்வந்துள்ளனர்.