“காங்கிரஸுடன் சேர வேண்டாம்..” - நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் முற்றிலும் புறக்கணிக்க திமுக எம்பிக்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு!
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், லண்டனில் இருந்தபடி காணொளி வாயிலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியுடன் எந்த விவகாரத்திலும் இணைந்து செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் அமைந்த புதிய அரசுக்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அதிருப்தியடைந்த திமுக, தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து அண்மையில் விலகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தையும் திமுக முற்றிலும் புறக்கணித்திருந்தது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் தற்போது நாடாளுமன்றத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று லண்டனில் இருந்து காணொளி மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மு.க.ஸ்டாலின் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்திற்குள் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் எந்தவொரு கூட்டுக் கூட்டங்கள், போராட்டங்கள் அல்லது ஆலோசனைக் கூட்டங்களையும் திமுக எம்பிக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரம், மாநில உரிமைகள் மற்றும் தமிழகத்திற்குத் தேவையான நிதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக எம்பிக்கள் தனித்தே நாடாளுமன்றத்தில் தங்களின் வலுவான குரலை எழுப்ப வேண்டும். காங்கிரஸ் அல்லாத பிற மாநிலக் கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களில் மட்டும் திமுக உறுப்பினர்கள் பங்கேற்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான முக்கிய மசோதாக்களைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், தென் மாநிலங்களின் உரிமைகள் மற்றும் தொகுதிப் பங்கீடு பாதிக்கப்படாத வகையில் மத்திய அரசு இதில் திருத்தங்களைக் கொண்டு வந்தால், இந்த மசோதாக்கள் மீதான தங்களின் இறுதி நிலைப்பாட்டை திமுக மறுபரிசீலனை செய்யக்கூடும் என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநில உரிமைகளைக் காப்பதில் திமுக சமரசம் செய்து கொள்ளாது என்பதை எம்பிக்கள் அவையில் அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும் என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.