“மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காதீங்க!” - முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் அம்மாநில வனத்துறையினரால் அநியாயமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குத் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்து எவ்வித மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது."
குற்றமிழைத்த அதிகாரிகளைக் காப்பாற்றக் கர்நாடக வனத்துறை முயல்வதாகத் தெரிகிறது. அதைத் தவிர்த்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து, வெளிப்படையான பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி மெளனம் காக்காமல், தமிழ்நாடு அரசு உடனடியாகக் கர்நாடக அரசுக்குத் தனது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும்.
உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பத்தினருக்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் வேலை கிடைக்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.