'வாக்கு எண்ணிக்கையின் போது சிரிக்கக் கூடாது' - தேர்தல் அலுவலர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!

 

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் தேர்தல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மிக முக்கியமான சில அறிவுறுத்தல்களை வழங்கினார்.

வாக்கு எண்ணும் பணியின் போது அலுவலர்கள் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தக் கூடாது என்று ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாகப் பணியில் இருக்கும்போது சிரிப்பு, கோபம் அல்லது பதற்றம் போன்ற எதனையும் காட்டக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் முகவர்கள் யாராவது தெரிந்தவர்களாக இருந்தாலும், அவர்களைப் பார்த்துக் கை காட்டுவதோ அல்லது சைகைகள் செய்வதோ முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பணியை ஒரு கடமையாகக் கருதி, எவ்விதச் சார்புமின்றிச் செயல்பட வேண்டும் என்பதில் ஆணையர் உறுதியாக உள்ளார். "வாக்கு எண்ணும் இடத்திற்குச் சென்றோமா, ஒதுக்கப்பட்ட பணியைச் சரியாக முடித்தோமா, திரும்பினோமா என்று மட்டுமே இருக்க வேண்டும்" என அவர் கறாராகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வித எதிர்வினைகளும் இன்றி அமைதியாகவும், கவனமாகவும் செயல்பட்டு வாக்கு எண்ணிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதே அதிகாரிகளின் இந்த அதிரடி உத்தரவின் நோக்கமாக உள்ளது.