"இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம்... 75 வருஷமா தலித் மக்களுக்காக என்ன செஞ்சீங்க?" - திமுகவைப் பந்தாடிய ஆதவ் அர்ஜுனா!

 

சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராஜாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, திமுகவை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் காரசாரமான விவாதத்திற்கும் வித்திட்டுள்ளார்.

"இந்த சவுண்டுலாம் இங்க விட வேண்டாம், நீங்கள் கத்தினால் பயந்துடுவோமா? எந்திரிச்சு நின்னிங்கனா நாங்களும் எழுந்து நிற்போம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று ஆதவ் அர்ஜுனா கடுமையாக எதிர்வினையாற்றினார்.

1999 முதல் 2003 வரையிலான பாஜக கூட்டணியில் திமுக அங்கம் வகித்ததையும், கோத்ரா கலவரத்தின் போது எடுக்கப்பட்ட நிலைப்பாடுகளையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், "50 ஆண்டு வரலாற்றை நாங்களும் எடுத்துப் பேசுவோம்" என எச்சரித்தார்.

கடந்த 75 ஆண்டுகளில் தலித் மக்களுக்காக என்ன செய்யப்பட்டது என்று கேள்வி எழுப்பிய அவர், தலித் மக்களில் 28 சதவீதம் பேர் இன்னும் குடிசைகளில்தான் வசித்து வருவதாகவும், தலித் பெண்களுக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

காலனி என்ற பெயர்களை மாற்றுவதன் மூலம் சாதி ஒழிந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய அவர், சாதியை முதலில் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தவெக அரசு சமூகநீதித்துறை எனப் பெயர் மாற்றியதாகத் தெரிவித்தார்.

தான் 2015 முதல் 2021 வரை திமுகவில் பணியாற்றியதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த 6 ஆண்டுகளில் நடைபெற்றவை குறித்துப் பேசத் தொடங்கினால் அது பலருக்கு நல்லதல்ல என்று எச்சரிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த அனல் பறக்கும் விவாதம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.