"என்னை யாரும் தேடாதீங்க..." - கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் ஓடிய கல்லூரி மாணவி!

 

கோவையில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் பையுடன் வெளியேறிய 19 வயது கல்லூரி மாணவி, "நான் காதலனுடன் செல்கிறேன், என்னை யாரும் தேட வேண்டாம்" எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், அங்குள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை அறிவியல் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில், தான் கல்லூரிக்குச் சென்று வருவதாகத் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, பையுடன் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, அந்த மாணவியின் தந்தை வேலை விஷயமாக வெளியே சென்றபோது, வழியில் தனது மகளின் தோழியை எதிர்பாராத விதமாகப் பார்த்துள்ளார். அவரிடம், "என் மகள் கல்லூரிக்குச் சென்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் செல்லவில்லை?" என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தத் தோழி, "கல்லூரி வரும் ஜூன் 10-ம் தேதி தானே திறக்கிறது" என்று கூறியுள்ளார். தோழியின் இந்த பதிலைக் கேட்டு அந்தத் தந்தை பெரும் அதிர்ச்சியடைந்தார்.

மகள் தன்னிடம் பொய் சொல்லிவிட்டுச் சென்றதை உணர்ந்த தந்தை, உடனடியாக மகளின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டார். ஆனால், அவரிடம் பேச முடியவில்லை. பதற்றமடைந்த அவர் அவசர அவசரமாக வீட்டிற்குச் சென்று மகளின் அறையைத் தேடினார். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது.

அந்தக் கடிதத்தில், "நான் ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்து வருகிறேன். அவருடன் செல்கிறேன். எனவே, என்னை யாரும் தேட வேண்டாம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதைப்பார்த்து நிலைகுலைந்த தந்தை, மீண்டும் மகளின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேடியும் மாணவி குறித்து எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இதனால் செய்வதறியாது திகைத்த தந்தை, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் தனது மகள் மாயமானது குறித்துப் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாணவி எழுதி வைத்துள்ள கடிதத்தைக் கைப்பற்றியுள்ள போலீசார், அவரது கைபேசி எண்ணின் இருப்பிடத்தை வைத்தும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும், கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான கல்லூரி மாணவியையும் அவரது காதலனையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.