"சட்டமன்றத்தில் என்னைத் தேடாதீங்க... மக்கள் நலத்திட்ட கோப்புகளில் இந்த ஸ்டாலின் இருப்பான்" - விஜய்யின் குட்டிக்கதைக்கு ஸ்டாலின் பதிலடி!

 

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பேசிய குட்டிக்கதைக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். சன் செய்திகள் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தம்மைக் கோட்டையிலோ அல்லது சட்டமன்றத்திலோ தேட வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது உரையாற்றிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர்கள் அவைக்கு வராததை விமர்சிக்கும் தொனியில், 'அப்பாவை காணோம்' என்ற பாணியில் ஒரு குட்டிக்கதையைச் சொல்லிச் சட்டமன்றத்தில் பேசியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த விமர்சனத்திற்குத் தனது பாணியில் பதிலளித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களின் மக்கள் நலத்திட்டங்களை முன்னிறுத்திப் பேசியுள்ளார். "சட்டமன்றத்தில் என்னை நீங்கள் தேடாதீர்கள், நான் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறேன்."

மேலும், முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை அவர் பட்டியலிட்டுக் காட்டமாகப் பேசினார்.

"தலைமைச் செயலகக் கோட்டையில் என்னை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அங்குள்ள கோப்புகளை எடுத்துப் பாருங்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தின் கோப்பைப் பாருங்கள். அதேபோல, ஏழை எளிய மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள், அந்த ஒவ்வொரு கோப்பிலும், மக்கள் பணியிலும் இந்த ஸ்டாலின் கண்டிப்பாக இருப்பான்" என்று அவர் கம்பீரமாகத் தெரிவித்துள்ளார்.