“இந்த தவறுகளை செய்யாதீங்க... உசுரே கூட போக வாய்ப்பு...” - சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் அவசர அறிவுறுத்தல் ! 

 

சவுதி அரேபியாவில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள் அந்நாட்டின் உள்ளூர் சட்ட திட்டங்களைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என இந்தியத் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் சர்வதேச விமான நிலையங்கள், எண்ணெய் வயல்கள் மற்றும் பொது உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தொடர்ந்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சவுதி அரேபியா சிவில் பாதுகாப்பு இயக்ககம் வெளியிட்ட எச்சரிக்கையை மேற்கோள் காட்டி இந்தியத் தூதரகம் மற்றும் ஜெத்தா தூதரகக் கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புப் படைகள் ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களை வான்வெளியிலேயே இடைமறித்து அழிப்பது தொடர்பான நிகழ்வுகளை வீடியோ/புகைப்படம் பிடிக்கவோ அல்லது அதுகுறித்த தகவல்களை இணையத்தில் வெளியிடவோ கூடாது.

இது போன்ற நிகழ்வுகளைப் படம்பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பகிர்பவர்கள் மீது சவுதி அரேபியா சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்.எனவே, சவுதியில் வாழும் இந்திய மக்கள் அமைதி காத்து, உள்ளூர் பாதுகாப்புத் துறை வழங்கும் வழிமுறைகளையும் சட்ட திட்டங்களையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.