ஆக.16 மிஸ் பண்ணாதீங்க... தோஷங்களைப் போக்கும் நாக சதுர்த்தி.. வழிபாட்டு முறைகளும் பலன்களும்!

 

கால சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷங்கள் மற்றும் நாக தோஷங்களைப் போக்கும் சிறப்புமிக்க நாக சதுர்த்தி வழிபாடானது, ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே நீராடி, தூய்மையான ஆடைகளை அணிந்து மனத்தூய்மையுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

வீட்டின் அருகிலுள்ள சிவாலயங்கள் அல்லது பெருமாள் கோவில்களில் அமைந்திருக்கும் நாக புற்று அல்லது நாகர் சிலைகளுக்குப் பால், இளநீர், பன்னீர் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து நைவேத்தியம் படைக்கலாம்.

நாகர் சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்கரித்து அஷ்ட நாகங்களையும் நினைத்துத் தூப தீப ஆராதனைகள் காட்டி வழிபட வேண்டும். ஜாதகத்தில் உள்ள கால சர்ப்ப தோஷம், ராகு-கேது தோஷங்கள் மற்றும் நாக தோஷங்களின் வீரியம் குறைந்து நன்மைகள் பெருகும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போகும் திருமணத் தடைகள் அகன்று, விரைவில் சுபகாரியங்கள் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிடைப்பதுடன், குடும்பத்தில் நோயற்ற வாழ்வும், செல்வ வளமும் பெருகும் என்பது ஐதீகம்.