மிஸ் பண்ணாதீங்க... இன்று வாக்காளர் சேர்க்கை, திருத்த சிறப்பு முகாம்... கூடுதலாக 3 நாட்களுக்கு நீட்டிப்பு! 

 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்காக இன்று மற்றும் வரும் டிசம்பர் 5, 6 ஆகிய 3 நாட்களுக்கு மீண்டும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்களின் நலன் கருதி கூடுதலாக 3 நாட்களுக்கு இம்முகாம்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி கடந்த நவம்பர் 12-ஆம் தேதி வரைவு வாக்காளர் சுருக்கத்திருத்தப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வசதிக்காக இன்று (நவம்பர் 29) மற்றும் டிசம்பர் 5, 6 ஆகிய மூன்று நாட்களில் மீண்டும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் இம்முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 தொகுதிகளில் உள்ள 4,071 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. அந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 8,502 பேர் பங்கேற்ற நிலையில், அவர்களில் 5,156 பேர் முதல்முறை வாக்காளர்களாகத் தங்களது பெயரைச் சேர்ப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.