"வதந்திகளை நம்பி பீதி அடைய வேண்டாம்!" - பெட்ரோல், சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு விளக்கம்!

 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் மக்களிடையே பரவி வரும் நிலையில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது. "நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது; பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை" என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் இன்று உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் மூண்டதால், ஈரானின் ஹார்முஸ் நீரிணையில் சுமார் 28 இந்தியச் சரக்குக் கப்பல்கள் சிக்கின. இதில் 24 கப்பல்கள் மேற்குப் பகுதியிலும், 4 கப்பல்கள் கிழக்குப் பகுதியிலும் முடங்கின. ஆனால், மத்திய அரசின் ராஜதந்திரப் பேச்சுவார்த்தையால் ஷிவாலிக் மற்றும் நந்தாதேவி ஆகிய கப்பல்கள் கடந்த மார்ச் 16, 17 தேதிகளில் 92,712 டன் எரிபொருளுடன் குஜராத் வந்தடைந்தன. ஜக் லாட்கி என்ற கப்பல் 80,800 டன் கச்சா எண்ணெயுடன் மார்ச் 18-ல் முந்த்ரா துறைமுகத்தை அடைந்தது. தற்போது ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் ஆகிய எல்பிஜி கப்பல்கள் இந்தியா நோக்கிப் பாதுகாப்பாக வந்து கொண்டிருக்கின்றன.

அகமதாபாத் உள்ளிட்ட குஜராத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இது தட்டுப்பாட்டினால் ஏற்பட்ட கூட்டமல்ல; மாறாக, பெட்ரோல் டீலர்கள் எண்ணெய் நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பச் சிக்கலே இதற்குக் காரணம் என விளக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றாக்குறை எனத் தவறாகப் புரிந்துகொண்ட மக்கள் பீதியில் பங்குகளை முற்றுகையிட்டனர்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், சமையல் எரிவாயு விநியோக மையங்களில் தட்டுப்பாடு ஏதுமில்லை. போதுமான அளவு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன. நேற்று மக்கள் பீதி காரணமாகக் கூடுதலாக முன்பதிவு செய்துள்ளனர், ஆனால் விநியோகம் சீராகவே உள்ளது. வாகன எரிபொருட்களுக்கும் எந்தத் தடையும் இல்லை. விநியோகச் சங்கிலி சாதாரணமாகவே உள்ளது. குழாய் வழி எரிவாயு விநியோகம் 100% உள்நாட்டு நுகர்வோருக்காக உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவிசார் அரசியல் சூழலைச் சாதகமாக்கிக் கொண்டு சில சமூக விரோதிகள் பரப்பும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம். எரிபொருள் இருப்பு குறித்து அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.