உசுரோட விளையாடாதீங்க... ஓடும் பேருந்தில் டிரைவரின் கவனத்தைச் சிதறடித்த இளம்பெண்!

 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும், பயணிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையிலும் தனியார் பேருந்து ஒன்றில் அரங்கேறியுள்ள நிகழ்வு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் பேருந்தின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டு இளம்பெண் ஒருவர் ஓட்டுநருடன் தொடர்ந்து பேசிய வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பொதுப் போக்குவரத்தின் போது ஓட்டுநர்களின் கவனம் மாறுவது கடுமையான சாலை விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், இது குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை சிவானந்தா காலனி வழித்தடத்தில் இயங்கி வரும் குறிப்பிட்ட ஒரு தனியார் பேருந்தில் நேற்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. பேருந்து பயணிகளுடன் இயங்கிக் கொண்டிருந்த போது, முன்பக்க நுழைவுவாயில் வழியாக ஏறிய இளம்பெண் ஒருவர், பயணிகள் அமரும் இருக்கைக்குச் செல்லாமல் ஓட்டுநர் இருக்கையின் அருகே உள்ள கியர் பாக்ஸ் மீது அமர்ந்துள்ளார்.

பேருந்து ஓடிக்கொண்டிருந்த நிலையிலும், அந்தப் பெண் தொடர்ந்து ஓட்டுநருடன் நெருக்கமாகப் பேசிக் கொண்டு சென்றுள்ளார். ஓட்டுநரும் சாலையைக் கவனிப்பதைக் குறைத்துக் கொண்டு அந்தப் பெண்ணுடன் பேசியவாறே பேருந்தை இயக்கியுள்ளார்.

அதே பேருந்தில் பயணித்த சக பெண் பயணி ஒருவர், ஓட்டுநரின் இந்த ஆபத்தான அஜாக்கிரதை தனத்தையும், இளம்பெண்ணின் செயலையும் தங்களது கைபேசி மூலம் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். பின்னர் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இது பலரின் கவன ஈர்ப்பைப் பெற்று விவாதப் பொருளாக மாறியுள்ளது.

பேருந்தில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உயிரைப் பொருட்படுத்தாமல், கவனச்சிதறலை ஏற்படுத்தும் வகையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீதும், அதற்குத் துணை நின்ற தனியார் பேருந்து நிர்வாகத்தின் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள்  மற்றும் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.