"அரசியலாக்க வேண்டாம்"... பேத்தியின் திருமணம் குறித்து துரைமுருகன் விளக்கம்!
தனது பேத்தியின் திருமணம் தொடர்பாக எழுந்துள்ள செய்திகள் மற்றும் விவாதங்கள் குறித்துத் திமுக பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பச் சூழல் மற்றும் திருமண நிகழ்வின் பின்னணி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், வெளிநாட்டில் உயர்கல்வி பயின்ற தனது பேத்தி, வேறு ஒரு மாற்றுச் சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்து வந்ததாகவும், அவரே வைதீக முறைப்படி அந்தத் திருமணத்தை செய்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பேத்தியின் தீவிரமான வற்புறுத்தல் மற்றும் அன்பின் காரணத்தினாலேயே இந்த திருமணத்தை ஏற்கும் கட்டாயத்திற்கு தாம் தள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ள அவர், கொள்கை நிலைக்கு மாறாக இந்நிகழ்வு அமைந்ததற்காக தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இது முற்றிலும் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த விவகாரம் என்பதால், பொதுவெளியில் இதைப் பெரிய விவாதப் பொருளாகவோ அல்லது அரசியல் ரீதியான விமர்சனங்களாகவோ யாரும் மாற்ற வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டின் மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது பேத்தியின் திருமணம் குறித்த இந்த அறிக்கை அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.