'சிறுபான்மை வேஷம் போடும் கூட்டணியை நம்பாதீர்கள்' - புதுவையில் சீறிய விஜய்!
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தட்டாஞ்சவாடி மற்றும் கொக்கு பார்க் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழக (தவெக) வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் விஜய் இன்று பிரம்மாண்டப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் முன்வைத்த விமர்சனங்கள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளை ஒருசேரத் தாக்கியுள்ளன.
பிரசார மேடையில் பேசிய விஜய், புதுச்சேரியின் நீண்டகால கோரிக்கையான 'மாநில அந்தஸ்து' குறித்துக் கடுமையாகப் பேசினார். "மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸும் சரி, இப்போது இருக்கும் பாஜக-வும் சரி, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. இரு கட்சிகளுமே மக்களை ஏமாற்றி வருகின்றன" என்று குற்றம் சாட்டினார்.
திமுக மற்றும் பாஜக கூட்டணிகளைச் சாடிய அவர், "தேர்தல் நேரத்தில் மட்டும் சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பது போல வேஷம் போடும் இந்த ஓட்டை உடைசல் கூட்டணிகளை மக்கள் நம்ப வேண்டாம். இது கொள்கை இல்லாத கூட்டணி" என்று விமர்சித்தார். தனது திரைப்பட வசனத்தைப் நினைவுபடுத்தும் வகையில், தவெக-வின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களித்து ஒரு "ஒரே விரல் புரட்சியை" நிகழ்த்துமாறு வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார். வெற்றி பெற்றால் தவெக அரசு செய்யப்போகும் திட்டங்களாகச் சிலவற்றை விஜய் பட்டியலிட்டார்: ஆட்சிக்கு வந்த 6 மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் மதிப்பிலான மருத்துவக் காப்பீடு. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம். புதுச்சேரி பயன்பாட்டு அறிவியல் மற்றும் கலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.
புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான நேயம் மக்கள் கழகம் களம் காண்கின்றன. தட்டாஞ்சவாடி தொகுதியில் தவெக சார்பில் மு. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.