"யாரையும் நம்பாதீங்க" - அகரம் பவுண்டேஷன் பெயரில் பண மோசடி - நடிகர் சூர்யா தரப்பு எச்சரிக்கை!
நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டு, நலிவடைந்த மாணவர்களின் கல்விக்காகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 'அகரம் பவுண்டேஷன்' , தற்போது பரவி வரும் மோசடி புகார்கள் குறித்துப் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அகரம் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், அகரம் பவுண்டேஷனுக்குச் சென்னை, தியாகராய நகரில் (T. Nagar) உள்ள அலுவலகத்தைத் தவிர, தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் கிளைகளோ அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளோ கிடையாது. மாவட்ட வாரியாக எந்தவொரு கிளை அலுவலகமும் தங்களுக்கு இல்லை என்பதை அந்த அமைப்பு உறுதிபடத் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாகச் சில போலி நபர்கள் அகரம் பவுண்டேஷன் பெயரையும், அதன் இலச்சினையையும் தவறாகப் பயன்படுத்தி: மாணவர் சேர்க்கை பெற்றுத் தருவதாகக் கூறி பணம் கேட்பது, தனிப்பட்ட சான்றிதழ்கள் அல்லது ஆவணங்களைக் கோருவது, வேலைவாய்ப்பு அல்லது கல்வி உதவித்தொகை வாங்கித் தருவதாக ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனத் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அகரம் பவுண்டேஷன் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாகவும், வெளிப்படையாகவும் வழங்குகிறது. விண்ணப்பம் முதல் கல்லூரி படிப்பு வரை எதற்கும் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. மாணவர்களின் சமூக மற்றும் பொருளாதாரச் சூழலை முறையாக ஆய்வு செய்த பிறகே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. எதற்கும் இடைத்தரகர்கள் கிடையாது.
அகரம் பெயரைப் பயன்படுத்தி யாராவது பணம் கேட்டால், உடனடியாக அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவோ அல்லது சென்னை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோ புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்விப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நற்பெயர் கொண்ட அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.