undefined

"என்னை காலி பண்ண நினைக்காதீங்க.. இப்படியே விட்டுடுங்க" - விழா மேடையிலேயே வெடித்த சிவகார்த்திகேயன்!

 

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'தாய் கிழவி' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. வழக்கமாக நகைச்சுவையாகப் பேசும் சிவகார்த்திகேயன், இந்த மேடையில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியது திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள சிவகார்த்திகேயன், சமீபகாலமாகத் தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் மற்றும் போட்டிகள் குறித்துப் பேசும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டார். "சினிமாவில் நான் யாருக்கும் போட்டியாக வரவில்லை. யாரையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இல்லை. தயவுசெய்து என்னை இப்படியே விட்டுவிடுங்கள். என் வேலையைப் பார்த்துக்கொண்டு, நல்ல படங்களைத் தயாரித்துக்கொண்டு நான் பாட்டுக்குத் தனி வழியில் செல்கிறேன்." இந்த வாசகம், அவருக்குத் திரைத்துறையில் கொடுக்கப்படும் அழுத்தங்களை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவது போல் அமைந்திருந்தது. "என்னை காலி பண்ண நினைக்காதீர்கள்" என்ற ரீதியில் அவர் பேசியது, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தனது நண்பர் அருண் ராஜா காமராஜை இயக்குநராக்கவே 'எஸ்கே புரொடக்ஷன்' தொடங்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், 'தாய் கிழவி' படம் குறித்தும் சில முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்: "இந்தத் தாய் கிழவி கதாபாத்திரத்தில் ராதிகா மேடத்தைத் தவிர இந்தியாவில் வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது" எனப் புகழ்ந்து தள்ளினார். இயக்குநரின் நேர்மை தான் தனக்குப் பிடித்திருந்தது என்றும், சினிமாவில் இருக்கும் 'ஈகோ சிஸ்டம்' அந்த நேர்மையைக் குறைத்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தனது கடமை என்றும் சிவகார்த்திகேயன் உறுதியளித்தார். படங்களில் நடிப்பதை விட, இது போன்ற தரமான படங்களைத் தயாரிப்பதில்தான் தனக்கு அதிக ஆத்ம திருப்தி கிடைப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் சரத்குமார், சூரி மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். வழக்கம்போலப் பால சரவணன் மற்றும் முனிஸ்காந்தை கலாய்த்துப் பேசிய சிவகார்த்திகேயன், இறுதியில் தனது நிஜமான மனவலியைப் பகிர்ந்துகொண்டது அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒரு பக்கம் பிரம்மாண்ட வெற்றிப் படங்கள், மறுபக்கம் தயாரிப்பாளராகத் தடம் பதிப்பது என ஓடிக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுக்குத் திரைத்துறையில் முட்டுக்கட்டை போடப்படுகிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்திருக்கும் இந்தப் படம் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.