“சாதி, மதம் பார்த்து வாக்களிக்காதீர்கள்!” - விஜய் சேதுபதி வழியில் நடிகர் நகுல் வேண்டுகோள்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கினைப் பதிவு செய்த நடிகர் நகுல், வாக்காளர்கள் எதன் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்துச் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார்.

வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் நகுல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மற்றும் கடமை. எனவே, அனைவரும் தங்களது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு கண்டிப்பாக ஓட்டுப் போட வர வேண்டும். மக்களுக்கு கடந்த காலங்களில் என்ன செய்திருக்கிறார்கள்? இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள்? என்பதை ஆழமாக யோசித்து உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். உங்கள் ஒரு வாக்கு உங்கள் எதிர்காலத்தை மாற்றும்.”

“சமீபத்தில் அண்ணன் விஜய் சேதுபதி சொன்னது போல, தயவுசெய்து சாதி அல்லது மதத்தைப் பார்த்து வாக்களிக்காதீர்கள். நாட்டின் முன்னேற்றத்தையும், மக்களின் தேவையையும் மட்டுமே கருத்தில் கொண்டு நல்ல வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.

இன்று காலை முதலே நடிகர் அஜித், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். நடிகர் நகுலின் இந்த 'சாதி, மதமற்ற' அரசியல் நிலைப்பாடு சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் முன்வந்து இத்தகைய கருத்துக்களைப் பகிர்ந்து வருவது, இளைஞர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.