'லிவ்-இன்' உறவில் வாழ்பவர்களுக்கும் வரதட்சணைக் கொடுமை சட்டம் பொருந்தும் - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
திருமணம் செய்துக் கொள்ளாமலேயே ஒரு வீடு எடுத்து, காதலர்கள் லிவ் -இன் உறவில், வாழ்ந்து வரும் போக்கு அதிகரித்து வரும் நிலையில்,திருமணத்தைப் போன்ற தன்மையுடைய 'லிவ்-இன்' உறவுகளுக்கும், பெண்களைக் கொடுமைப்படுத்துதலில் இருந்து பாதுகாக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 498ஏ பொருந்தும் என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
முறைப்படி திருமணம் நடைபெறவில்லை என்பதால் 498ஏ பிரிவு பொருந்தாது எனக்கூறி, தன் மீதான வழக்கைத் ரத்து செய்யக் கோரி நபர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கரோல் மற்றும் என். கோடீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை நிராகரித்தது.
இரண்டு பேரின் சம்மதத்துடன் தான் 'திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன்' நீண்டகாலம் இணைந்து வாழும் 'லிவ்-இன்' உறவு அமைந்திருக்கிறது. அப்படி இருவர் சம்மதத்துடன் உறவு அமைந்திருந்தால், அதில் பாதிக்கப்படும் பெண்களுக்கும் 498ஏ சட்டப் பாதுகாப்பு முழுமையாகக் கிடைக்கும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தினர்.
சமூகத்தில், குறிப்பாக நகரப் பகுதிகளில் 'லிவ்-இன்' உறவுகள் அதிகரித்து வரும் போக்காக மாறியுள்ள நிலையில், சட்டமும் அதற்கேற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
கொடுமை என்பது திருமணமான பெண்ணின் வீட்டின் கதவை மட்டும் தட்டுவதில்லை; திருமணம் போன்ற சூழலில் இணைந்து வாழும் பெண்களுக்கும் அது நிகழலாம். எனவே 'கணவன்' என்ற சொல்லுக்கான சட்டப் பொருளைப் பரந்த நோக்கில் கையாள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே வேளையில், இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, கைது நடவடிக்கைக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பூர்வாங்க விசாரணைகள் இதில் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.