ஜெயலலிதா போல் உடையணிந்து பிரச்சாரம்... மக்களிடையே உற்சாக வரவேற்பு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் திவ்யாவின் பிரசாரம் மற்ற வேட்பாளர்களை விடத் தனித்துவமாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
நேற்று நடைபெற்ற பிரசாரத்தின் போது, வேட்பாளர் திவ்யா மறைந்த 'புரட்சித் தலைவி' ஜெயலலிதாவின் தனித்துவமான அடையாளங்களுடன் காட்சியளித்தார். ஜெயலலிதா அவர்கள் வழக்கமாகக் கட்டும் அதே பாணியிலான புடவை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுடன் திவ்யா மக்கள் முன் தோன்றினார்.
இதனைக் கண்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் முதியவர்கள், "அம்மாவே நேரில் வந்தது போல் உள்ளது" என நெகிழ்ச்சியுடன் அவருக்குத் தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரசார வாகனத்தில் நின்றபடி மக்களிடையே பேசிய திவ்யா, அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை மீண்டும் நினைவுபடுத்தினார். தாலிக்குத் தங்கம், அம்மா உணவகம் போன்ற திட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
கிருஷ்ணராயபுரம் மற்றும் கரூர் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயிகளுக்கான பாசன வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார். தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு மகளாகவும், சகோதரியாகவும் என்றும் துணை நிற்பேன் எனத் தெரிவித்தார்.
கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதி என்பதால், இங்குப் பட்டியல் சமூக மக்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திவ்யாவின் இந்த 'அம்மா' செண்டிமெண்ட் பெண்களுக்கு இடையேயும், கிராமப்புற வாக்காளர்கள் இடையேயும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.