வறண்டு வரும் நீர்நிலைகள் - திருச்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

 

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து வெகுவாகக் குறைந்ததன் காரணமாக, திருச்சி மாநகரம் மற்றும் அதைச் சார்ந்த மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததால், திருச்சியின் முக்கிய நீர் ஆதாரங்களான காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முற்றிலும் வறண்டு பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன.

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம், மணப்பாறை, கம்பரசம்பேட்டை, ஸ்ரீரங்கம் உட்பட 10-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு இங்கிருந்தே நீர் பெறப்படுகிறது. இதன் மூலம் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், தற்போது நிலத்தடி நீர்மட்டம் சரிந்து நீர் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாநகரத்தின் தினசரி குடிநீர் தேவை கடந்த காலங்களில் 135 - 150 மில்லியன் லிட்டர் ஆக இருந்த நிலையில், தற்போது 165 மில்லியன் லிட்டராக உயர்ந்துள்ளது. சேகரிப்பு கிணறுகளில் நீர் இருப்பு குறைந்ததால், நகரில் தினசரி 15 மில்லியன் லிட்டர் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. மேட்டூரிலிருந்து குடிநீருக்காகத் திறக்கப்படும் தண்ணீரில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவே முக்கொம்பிற்கு வந்து சேர்கிறது.

மாநகரின் 60% குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து முற்றிலும் சரிந்துள்ளது. இதன் காரணமாக, 100 கி.மீ. தூரத்திற்கு குழாய்கள் பதித்துச் சோதனை ஓட்டம் வரை முடிந்த '24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதை ஒத்திவைக்கத் திருச்சி மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. சூழலைச் சமாளிக்கக் கொள்ளிடம் ஆற்றுப் படுகைகளில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு வருகிறது.