ட்ரோன் தாக்குதல், மக்கள் பாதிப்பு... போர் சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு தரவேண்டும் - ஐ.நா. சபையில் கத்தார் முறையீடு!

 

மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலில், ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் தங்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கத்தார் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கும், பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கும் கத்தார் அரசு கடிதம் எழுதியுள்ளது.

ஏப்ரல் 2-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை ஈரான் தொடர்ந்து டிரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகள் மூலம் கத்தார் நிலப்பரப்பைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதாகக் கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கத்தார் ஆயுதப் படைகள் ஈரானின் பல ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து அழித்தன. இதில் ஒரு ஏவுகணை இடைமறிக்கப்பட்டபோது, அதன் பாகங்கள் குடியிருப்புப் பகுதியில் விழுந்து சிதறின. இதில் நான்கு பேர் காயமடைந்தனர் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்தன.

இந்தத் தாக்குதல்கள் கத்தாரின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஈரான் நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானம் 2817 (2026)-ஐ ஈரான் அப்பட்டமாக மீறியுள்ளதாகக் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.

"ஈரானின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகளால் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் அந்த நாடே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதற்கான இழப்பீட்டை ஈரான் வழங்க வேண்டியது அதன் சர்வதேசக் கடமை" என கத்தார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

தனது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தயங்கப்போவதில்லை என கத்தார் எச்சரித்துள்ளது. சேதங்கள் குறித்த ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நாளை இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள சூழலில், கத்தாரின் இந்த முறையீடு ஈரானுக்குத் தூதரக ரீதியாகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.