ரவுடி, போதைப்பொருள் ஒழிப்பு.. 3 நாட்களில் 844 ரவுடிகள் கைது - 15,000க்கும் மேற்பட்டோரிடம் தீவிர சோதனை!
தமிழகத்தில் பொதுமக்களின் அமைதியான வாழ்விற்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் ரவுடிகள், சமூக விரோதிகள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழித்துக்கட்டும் பணியில் தமிழக காவல்துறை தற்பொழுது மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழக முதலமைச்சரின் நேரடி ஆணைக்கிணங்க, மாநிலம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதன வேட்டையில் 844 ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை தமிழக குற்ற உலகினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கத்தை முற்றிலுமாகத் தடுக்கவும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ரவுடித்தனத்தை ஒடுக்கவும் முதலமைச்சர் காவல்துறை உயர் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் "மெகா ஆபரேஷன்" ஒன்று கடந்த மூன்று நாட்களாகத் துவங்கப்பட்டு அதிவேகமாக நடத்தப்பட்டது.
இந்தத் தீவிர வேட்டையின் போது, தமிழகம் முழுவதும் குற்றப் பின்னணி கொண்ட மற்றும் சந்தேகத்திற்குரிய 15,349 ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் கண்டறியப்பட்டு, அவர்கள் காவல்துறையினரால் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது இருப்பிடங்கள் மற்றும் மறைவிடங்களில் நள்ளிரவிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த தேடுதல் வேட்டையின் முடிவில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயன்ற 844 ரவுடிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கைது செய்யப்பட்டுள்ள 844 நபர்களில் காவல் நிலையங்களில் ஏற்கனவே பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் போன்ற நிலுவை வழக்குகளைக் கொண்டு, குற்றப் பின்னணிப் பதிவேட்டில் உள்ள 488 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் நிலையப் பதிவேட்டில் இல்லாத, ஆனால் தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த 356 புதிய ரவுடிகளும் இந்த சோதனையில் சிக்கிக் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து கத்திகள், வீச்சரிவாள்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மற்றும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் (Goondas Act) பாயும் என்றும், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.