தவெக அமைச்சர் போதை வீடியோ விவகாரம்.. ‘எனக்குக் கொலை மிரட்டல் தர்றாங்க..’ - நண்பர் பரபரப்புப் புகார்!

 

தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கில்லி சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவை வெளியிட்டதாகக் கூறி, அவரது பள்ளி கால நண்பர் சரண் ஜெயராமனுக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் களத்தில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.

தமக்கும், தனது குடும்பத்திற்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி அவர் தாம்பரம் காவல் துணை ஆணையரிடம்  நேற்று பாதுகாப்பு மனு அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சரண் ஜெயராமன் தாம்பரம் துணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்தார்.

"நானும் அமைச்சர் கில்லி சரத்குமாரும் பள்ளிப் பருவத்தில் ஒரே வகுப்பில் ஒன்றாகப் படித்த நண்பர்கள் ஆவோம். நான் தற்போது திமுகவின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறேன்" என்று அவர் தனது பின்னணியைக் குறிப்பிட்டார்.

"தற்போது அமைச்சர் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மீண்டும் தீவிரமாகப் பரவி வருகின்றன. நான் திமுக ஆதரவாளர் என்பதால், என் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த வீடியோவை நான் தான் இணையத்தில் வெளியிட்டேன் என்று அமைச்சர் தரப்பு தவறாகக் கருதுகிறது."

"இந்தச் சந்தேகத்தின் அடிப்படையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர் கையில் கத்திகளுடன் எனது வீட்டை முற்றுகையிட்டு எனக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் எனது ஒட்டுமொத்தக் குடும்பமும் தற்போது பயத்தில் உறைந்துள்ளது. எங்களுக்கு உடனடியாகக் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்" என அவர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் சரண் ஜெயராமன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "தமிழ்நாட்டில் தற்போது ஏதேனும் தவறு நடந்தால், அதற்கு முந்தைய திமுக அரசுதான் காரணம் என்று ஆளுங்கட்சியான தவெக தொடர்ந்து கூறி வருகிறது. இந்த வீடியோ விவகாரத்திலும் அதையே தான் சொல்கிறார்கள்.

அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தினாரா இல்லையா என்ற உண்மையை அறிவியல் பூர்வமாகக் கண்டுபிடிப்பதை விடுத்து, அந்த வீடியோவை யார் ரிலீஸ் செய்தது என்று என் போன்ற நபர்களைத் தேடிப் பழிவாங்குவதில் காட்டி வரும் வேகம் யாருக்கானது? தவெக அரசு தங்களது அமைச்சரைக் காப்பாற்றத் துடிக்கிறதா?"

மேலும் பேசிய அவர், "அதிகாரமும், உளவுத்துறையும் இப்போது உங்களிடம் தானே உள்ளது? அமைச்சர் சரத்குமார் யாரிடமிருந்து அந்தப் போதைப்பொருளை வாங்கினார் என்று முறையான விசாரணை நடத்தி ஏன் கண்டுபிடிக்கவில்லை? அதை விடுத்து, சும்மா குழந்தை மற்றும் மனைவியுடன் வந்து செய்தியாளர்கள் முன்னிலையில் அது குழந்தையின் மாத்திரை என்று விளக்கம் அளித்தால் அதனைப் பொதுமக்கள் அப்படியே நம்பி விடுவார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன் பின்னர் அமைச்சரின் கடற்கரை மது அருந்தும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சரின் மைதான போதை, கடற்கரை மது அருந்தும் வீடியோக்களின் சர்ச்சை ஓய்வதற்குள், அவரது பள்ளித் தோழரே உயிருக்குப் பயந்து தாம்பரம் காவல்துறையில் தஞ்சம் புகுந்துள்ள விவகாரம் தவெக அரசுக்கு மேலும் ஒரு பெரிய அரசியல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்புகார் குறித்துத் தாம்பரம் போலிசார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.