ரூ.3,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தீயிட்டுக் கொளுத்தி அழிப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3,000 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருட்களை அந்நாட்டுப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் போலீசார் தீ வைத்து முழுமையாக அழித்துள்ளனர்.
லைபீரியாவில் அண்மைக்காலமாகப் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைச் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்:
லைபீரியத் தலைநகர் மொன்ரோவியாவில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 'டசன்' என்ற பகுதியில் உள்ள ஒரு பிரம்மாண்ட சேமிப்புக் கிடங்கில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,200 கிலோ எடையுள்ள கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சர்வதேசச் சந்தை மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.3,000 கோடி ஆகும். லைபீரிய நாட்டின் வரலாற்றிலேயே ஒரே கட்டத்தில் இவ்வளவு பெரிய தொகையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
பறிமுதல் செய்யப்பட்ட சட்டவிரோதப் போதைப்பொருட்கள் அனைத்தையும் உயர் அதிகாரிகளின் முன்னிலையில் போலீசார் நேற்றுத் தீ வைத்து எரித்து அழித்தனர். இந்த பிரம்மாண்டக் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த இருவரைப் போலீசார் சம்பவ இடத்திலேயே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வந்து பதுக்கியதன் பின்னணியில், உள்நாட்டுப் போலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசுத் துறை உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதனால் இக்கடத்தல் வலையமைப்பு குறித்து உயர் மட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.