புதிய உச்சம் தொட்ட முருங்கைக்காய் விலை !  

 
 

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட், தமிழகத்தில் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. பருவமழை தொடர்ச்சியாக பெய்ததால் காய்கறி செடிகளில் பூக்கள் உதிர்ந்து வருவதாக விவசாயிகளும், வியாபாரிகளும் கூறுகின்றனர். இதன் தாக்கமாக தலைவாசல் மார்க்கெட்டிற்கு வரத்து கணிசமாக குறைந்து, விலை உயர்வு மக்கள் பையில் தீ வைத்துள்ளது. இதோடு கார்த்திகை மாதம் காரணமாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துள்ளதும், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் காய்கறி தேவை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

மார்க்கெட்டில் நிலவும் நிலை குறித்து வியாபாரி சீனிவாசன் கூறினார்: “பருவமழைக்குப் பிறகு வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 80–100 ரூபாயாக இருந்த முருங்கைக்காய் நேற்று 320 ரூபாயாக உயர்ந்துள்ளது. வெளி சந்தைகளில் கூட 400 ரூபாய் வரை சென்றுள்ளது. தக்காளி கடந்த வாரம் 20–30 ரூபாயாக இருந்த நிலையில், உள்ளூர் வரத்து குறைந்ததால் முன்தினம் 70 ரூபாய், நேற்று 80 ரூபாயாக உயர்ந்துள்ளது. கறிவேப்பிலை கிலோ 20 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. கத்தரிக்காய், முள்ளங்கி, வெண்டைக்காய், பச்சைமிளகாய் ஆகியவை கிலோவுக்கு 10–20 ரூபாய் வரை உயர்ந்துள்ளன. காளான் தேவையும் அதிகரித்து, 225 ரூபாயில் இருந்தது 350 ரூபாயாகி, பாக்கெட் 50 ரூபாயில் இருந்து 70 ரூபாயாகியுள்ளது” என்றார்.

சின்னவெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்துக்கும் மழை காரணமாக அதிர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. சின்ன, பெரிய வெங்காயத்தை கையிருப்பில் வைத்திருந்த குவாரிகளில் மழை காரணமாக அழுகல் ஏற்பட்டதால், சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான சின்னவெங்காயம் தற்போது 50–60 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாயாக இருந்தாலும், தொடர்ந்து மழை தொடர்ந்தால் இதன் விலையும் உயரக்கூடும் என வியாபாரிகள் எச்சரிக்கின்றனர்.