போதையில் கன்டெய்னர் லாரியை ஓட்டி விபத்து.. பைக்கில் சென்றவர் மருத்துவமனையில் அனுமதி!

 

திருப்பூரில் மதுபோதையில் அசுரவேகத்தில் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்து, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்திய மயிலாடுதுறையைச் சேர்ந்த லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கச்சாம்பாளையத்தைச் சேர்ந்தவர் குமார் (48). இவர் நேற்று முன்தினம் இரவு தனது தனிப்பட்ட வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நகர்ப் பகுதியில் சென்று கொண்டிருந்தார். குமார் திருப்பூர் புஷ்பா சந்திப்பு அருகே வந்து கொண்டிருந்த போது, அவருக்குப் பின்னால் அசுரவேகத்தில் வந்த பிரம்மாண்ட கன்டெய்னர் லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தின் தாக்கத்தில் தூக்கி வீசப்பட்ட குமார், பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி பொதுமக்கள், அவரை மீட்டு உடனடியாகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்துத் தகவல் அறிந்த திருப்பூர் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தை ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியைப் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய மருத்துவப் பரிசோதனை மற்றும் விசாரணையில், லாரியை ஓட்டி வந்தது மயிலாடுதுறையைச் சேர்ந்த ஓட்டுநர் தேவேந்திரன் (43) என்பது தெரியவந்தது. மேலும், அவர் விபத்து நடந்த சமயத்தில் மதுபோதையில் லாரியை இயக்கியதே இந்த விபத்திற்குக் காரணம் என்பதும் அம்பலமானது. இதையடுத்து, பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக ஓட்டுநர் தேவேந்திரன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்பொழுது சிறையில் அடைத்துள்ளனர்.