போலீஸ் ரோந்து வாகனத்தைக் கடத்திச் சென்ற போதை ஆசாமி - கார் மீது மோதி பயங்கர விபத்து!
சென்னை பெரியமேடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களின் வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பெண் காவலர் சுகந்தி மற்றும் காவலர் ராஜ்குமார் ஆகியோர் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றபோது, அங்கிருந்த வாலிபர் ஒருவர் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஓட்டித் தப்பினார். காவலர்கள் தடுத்து நிறுத்த முயல்வதற்குள் அந்த நபர் போலீஸ் வாகனத்துடன் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மறைந்தார்.
அதிவேகமாகச் சென்ற அந்த போலீஸ் வாகனம், அடுத்த சில நிமிடங்களில் ராஜீவ் காந்தி மருத்துவமனை சிக்னல் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு வாடகை கார் மீது பயங்கர மோதியது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதமடைந்த நிலையில், அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த நபரை அங்கிருந்த போக்குவரத்து போலீசார் பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். இந்த விபத்து காரணமாக அந்தப் பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சமும் நிலவியது.
பிடிபட்ட நபரிடம் பெரியமேடு போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயதான லிஜோ ஜோசப் என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரான இவர், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமான மது போதையில் இருந்ததும், போலீஸ் வாகனத்தில் சாவி இருப்பதைப் பார்த்தவுடன் போதையில் அதனை ஓட்டிச் சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களின் அலட்சியம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.