மதுபோதையில் நண்பனை அடித்துக் கொன்ற கொடூரம்... துத்துக்குடியில் பரபரப்பு!
தூத்துக்குடி நாசரேத் அருகே நள்ளிரவில் மது அருந்தும் போது ஏற்பட்ட அற்ப வாக்குவாதத்தில், தனது சொந்த நண்பனையே மரக்கட்டையால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த கட்டிடத் தொழிலாளியைக் காவல் துறையினர் சில மணி நேரங்களிலேயே அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ராஜா (41). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பாஸ்கர் (37) என்பவரும் மிக நெருங்கிய நண்பர்கள். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் தினசரி வேலை முடிந்து ஒன்றாகவே வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
நேற்று நள்ளிரவில் வழக்கம் போல் இருவரும் ஒரு தனிமையான இடத்தில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் இடையே திடீரென ஏதோ ஒரு பழைய விவகாரம் குறித்துக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வார்த்தை முற்றி ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பாஸ்கர், அருகில் கிடந்த ஒரு கனமான மரக்கட்டையை எடுத்து ராஜாவை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளார். பாஸ்கர் கையில் இருந்த மரக்கட்டையால் ராஜாவின் தலை மற்றும் முகத்தில் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் மண்டை உடைந்து, பலத்த காயமடைந்த ராஜா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாகத் தன் உயிரை விட்டார்.
நண்பன் இறந்துவிட்டதை உணர்ந்து போதை தெளிந்த பாஸ்கர், மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற பயத்தில் நள்ளிரவிலேயே அங்கிருந்து தப்பியோடி மறைந்தார். இன்று காலை அப்பகுதி மக்கள் ராஜா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நாசரேத் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலையாளி பாஸ்கரை பிடிப்பதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மொபைல் சிக்னல் மற்றும் உள்ளூர் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், தப்பியோடிய சில மணி நேரங்களிலேயே பாஸ்கரை போலீசார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.