மது போதையில் வளர்ப்பு தந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற இளைஞர் - கேரளாவில் பயங்கரம்!

 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா அருகே மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், வளர்ப்பு தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்றுவிட்டுத் தலைமறைவான இளைஞரை மலம்புழா காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் மலம்புழா குர்திகடவு பகுதியைச் சேர்ந்த வினோத் (38) என்பவரும், அவரது வளர்ப்பு மகன் சதீசும் நேற்று இரவு தங்களது வீட்டில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுவைக் பகிர்வதில் இருவருக்கும் இடையே சிறிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விபரீதமடைந்து முற்றவே, ஆத்திரமடைந்த சதீஷ் அங்கிருந்த கத்தியை எடுத்து வளர்ப்பு தந்தை வினோத்தை சரமாரியாகக் குத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையைக் கொன்றதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த சதீஷ், அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்துத் தகவலறிந்த மலம்புழா காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாகவழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள வளர்ப்பு மகன் சதீசை வலைவீசித் தேடி வருகின்றனர்.