குடிபோதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த அதிகாரி - பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சியில் செயலராகப் பணியாற்றி வரும் நபர், பணி நேரத்தில் போதையில் அலுவலகத்திற்கு வந்து பொதுமக்களிடம் தகராாரில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மல்லேகவுண்டம்பாளையம் கிராம ஊராட்சியில் செயலராகப் பணியாற்றி வருபவர் ராஜேந்திரன் (52). இவர் நேற்று வழக்கம் போல் தனது அலுவலகப் பணிக்கு வந்தபோது கடுமையான குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அலுவலகத்திற்குப் பல்வேறு தேவைகளுக்காக வந்திருந்த பொதுமக்கள், அரசுப் பணியில் உள்ள ஒருவர் இதுபோன்று மது அருந்திவிட்டுப் பொறுப்பற்ற முறையில் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்குப் பரபரப்பான சூழல் உருவானது.

இந்தச் சம்பவம் குறித்து உடனடியாகப் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்திற்குப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினரும் அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட ஊராட்சிச் செயலர் ராஜேந்திரனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.