நகை , பணத்துக்காக பெண் வியாபாரி அடித்தே கொலை... டிஎஸ்பி அலுவலகம் அருகே துணிகரம்!
திருப்பத்தூர் மாவட்டம் கோணாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா. அறுபத்தெட்டு வயதான இந்த மூதாட்டி, கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் உள்ள காவல்துறை அலுவலகத்தின் அருகே சாலையோரம் பழ வியாபாரம் செய்து வந்தார். கணவரை இழந்த இவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். வழக்கம்போல வியாபாரத்தை முடித்துவிட்டு மகனின் வீட்டிற்குச் செல்லும் இவர், அன்றைய தினம் இரவு வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
சந்திரா வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். இந்த நிலையில், அவர் வியாபாரம் செய்யும் இடத்தின் அருகே உள்ள ஒரு பாழடைந்த அரசு குடியிருப்புக் கட்டிடத்தில் இருந்து ரத்தம் கசிவதைப் பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, சந்திரா தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சந்திராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவரிடம் இருந்த தங்க நகைகள் மற்றும் வியாபாரப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக நான்கு தனிப்படைகள் அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.