துபாய் மன்னரின் சகோதரர் காலமானார் - உலக நாடுகள் இரங்கல்; துபாய் அரசு 10 நாட்கள் துக்கம் அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமதுவின் இளைய சகோதரரும், துபாய் காவல் மற்றும் பொது பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவருமான ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் காலமானார். அவரது மறைவுக்கு உலக நாடுகள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளன.
துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் இளைய சகோதரரான ஷேக் அகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது 76-வது வயதில் காலமானார். அவர் நேற்றிரவு காலமானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், அவரது இறப்புக்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
ஷேக் அகமதுவின் மறைவையொட்டி, துபாயில் 10 நாட்களுக்கு அரசுத் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் துபாய் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தக் துக்க காலத்தில் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் முக்கிய அலுவலகங்களிலும் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
தன் அன்புச் சகோதரரின் மறைவு குறித்து துபாய் மன்னர் ஷேக் முகமது வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "எனது சகோதரர் மீது இறைவன் கருணை காட்டட்டும். அவர் எங்கள் பார்வையைவிட்டு மறைந்தாலும், எங்களின் பிரார்த்தனைகளிலும் இதயங்களிலும் என்றென்றும் நிலைத்திருப்பார்" என்று மிகுந்த மனவேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
அரபு நாடுகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஷேக் அகமதுவின் மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், துபாய் அரச குடும்பத்தினருக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வருகின்றனர்.