எரிபொருள் தட்டுப்பாட்டால்.. உலகின் முதல் நாடாக அவசர நிலை பிரகடனம் செய்தது பிலிப்பைன்ஸ் அரசு!

 

மத்திய கிழக்கு நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், அவசர நிலை பிரகடன் செய்திருக்கிறது பிலிப்பைன்ஸ் அரசு. பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் இந்த முடிவை அடுத்த 1 வருடம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளார்.  நேற்று பிலிப்பைன்ஸ் அதிபர் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவில் கையெழுத்திட்டார்.

தற்போதைய மத்திய கிழக்கு போர் சூழலால் எரிசக்தி பாதுகாப்பு கருதி, ஒரு நாடு "தேசிய எரிசக்தி அவசர நிலை" பிரகடனம் செய்த முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் தனது எரிசக்தி தேவையில் சுமார் 98% அளவை வளைகுடா நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்கிறது. போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் வருவது தடைபடலாம் என்ற "உடனடி ஆபத்து" இருப்பதாக அரசு கருதுகிறது. கடந்த மூன்று வாரங்களில் அங்கு பெட்ரோல், டீசல் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.

அவசர நிலையின் கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளாக, அரசு நேரடியாக வெளிநாடுகளிலிருந்து கச்சா எண்ணெயை வாங்கவும், அதற்கான முன்பணத்தைச் செலுத்தவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்யச் சிறப்பு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் தற்போது 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ளதால், கூடுதலாக 10 லட்சம் பேரல் எண்ணெயை வாங்க அரசு முயற்சி எடுத்து வருகிறது.

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க, இயற்கை எரிவாயுவிற்குப் பதில் தற்காலிகமாக நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அவசர நிலை பிரகடனம் ஒரு வருடம் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.