‘டம்மி முதல்வர்’ விஜய்யை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் - திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா கடும் தாக்கு!
பாஜகவின் தனியார்மயக் கொள்கையைத் தமிழகத்தில் அமல்படுத்தும் ஏஜெண்டாக தமிழக வெற்றிக் கழக அரசு மாறியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, முதல்வர் விஜய்யை ஆட்சியை விட்டு விரட்ட மக்கள் தயாராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா தனது சமூக வலைதளப் பதிவில், தமிழக அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பாஜகவின் தனியார்மயக் கொள்கையைத் தமிழ்நாட்டில் தீவிரமாகச் செயல்படுத்தும் அதிகாரப்பூர்வ ஏஜெண்டாகத் தவெக அரசு உருவெடுத்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தின் நிர்வாகப் பொறுப்புகளை அதானி குழுமத்திற்குத் தாரைவார்ப்பதற்காக, கடந்த ஆகஸ்ட் மாதமே பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் ரகசியக் கடிதம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரை 'டம்மி முதலமைச்சர்' என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு முழுமையாக விலைபோவதற்குள், தவெக தலைவர் விஜய்யை ஆட்சியை விட்டு விரட்டுவதற்கு மக்களே முன்வந்து தயாராக வேண்டும் என்றும் தனது பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார்.