துறைமுகம் தொகுதி நாதக வேட்பாளர் காரில் ‘டம்மி’ துப்பாக்கி பறிமுதல்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், சென்னையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் பயணித்த காரில் இருந்து ‘ஏர் பிஸ்டல்’ எனப்படும் டம்மி துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முல்லை நகர் பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பறக்கும் படை அதிகாரி சக்திவேல் முருகன் தலைமையிலான குழுவினர் மற்றும் காவல்துறையினர் அந்த வழியாக வந்த வாகனங்களை ஒவ்வொன்றாக நிறுத்திச் சோதனையிட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தச் சோதனையின்போது, காரின் உள்ளே துப்பாக்கி போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பறக்கும் படையினர் அந்தத் துப்பாக்கியைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அது உண்மையான துப்பாக்கி அல்ல என்பதும், அது ‘ஏர் பிஸ்டல்’ எனப்படும் டம்மி துப்பாக்கி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய பொருட்களை அனுமதியின்றி எடுத்துச் செல்வது விதிகளுக்குப் புறம்பானது என்பதால் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். 

அந்த காரில் பயணித்தது சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பவுசான் ஷெரீப் (25) என்பது தெரியவந்தது. அவருடன் காரில் இருந்த அவரது நண்பர் அப்துல் அமீர் (25) என்பவருக்கு அந்த டம்மி துப்பாக்கி சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தேர்தல் நேரத்தில் ஆயுதங்கள் அல்லது ஆயுதங்களைப் போன்ற தோற்றம் கொண்ட பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேர்தல் ஆணையம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களே அவற்றை அந்தந்தக் காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஒரு வேட்பாளரின் காரிலேயே இத்தகைய டம்மி துப்பாக்கி பிடிபட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதையடுத்து, பறக்கும் படையினர் அந்த டம்மி துப்பாக்கியைப் பறிமுதல் செய்து, அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, எதற்காக அந்த துப்பாக்கி காரில் வைக்கப்பட்டு இருந்தது? ஏதேனும் அச்சுறுத்தல் காரணத்திற்காக வைக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது வேட்பாளர் ஒருவரின் வாகனத்திலேயே துப்பாக்கி (டம்மி என்றாலும்) சிக்கியிருப்பது, தேர்தல் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் தொகுதிகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் நடத்தை விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும், மீறுபவர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி தரப்பில் இருந்து இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.