துணை முதல்வர் பதவி... தவெக-விடம் பாமக அதிரடி நிபந்தனை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்டாததால் பிற கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தவெக-வை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு விஜய் கடிதம் எழுதியுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் கோரியுள்ளார். தற்போது காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு தவெக-விற்கு கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள போதிலும், அது ஆட்சி அமைக்கப் போதுமானதாக இல்லை.
நிலைமையைச் சமாளிக்க அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆலோசனையின் போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒரு மிகப்பெரிய நிபந்தனையை முன்வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக-விற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென்றால், தனது மனைவி சௌமியா அன்புமணிக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் விஜய் ராஜினாமா செய்யப்போகும் ஒரு தொகுதியைப் பாமக-விற்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது.
வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பாமக, தவெக-வின் தற்போதைய அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி இத்தகைய பெரிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 108 இடங்களை வைத்துள்ள தவெக, மிகக் குறைந்த இடங்களை வைத்துள்ள ஒரு கட்சியின் இத்தகைய நிபந்தனைகளை ஏற்பது கடினம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதுடன், அரசியல் களம் மிகுந்த பரபரப்பில் உள்ளது.