“துரை வைகோ விரைவில் எதிர்க்கட்சித் தலைவராக வருவார்” - அமைச்சர் செங்கோட்டையன்!
முதல்வர் விஜய்க்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் கூட்டத்தை யாராலும் அளவிட முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன், மதிமுக எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக அமரும் என்றும், துரை வைகோ விரைவில் எதிர்க்கட்சித் தலைவராக வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
தாராபுரம் வேட்பாளருக்கு ஆதரவாக நடைபெற்ற மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், தாராபுரத்திற்கு நாளை வரவிருக்கும் முதலமைச்சர் விஜயைக் காணக் கூடும் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது என்றார்.
அதிமுகவில் நிலவும் சூழலைக் குறிப்பிட்ட அவர், எடப்பாடியின் செயலால்தான் கழகம் சிதைந்து கொண்டிருக்கிறது என்றும், நல்லவேளையாகத் தான் அந்த அணியில் இருந்து தப்பித்துவிட்டதாகவும் விமர்சித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தவர் வைகோ என்றும், 90-களிலேயே அவர் சரியான முடிவெடுத்திருந்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும் குறிப்பிட்டார். மேலும், மதிமுக எதிர்காலத்தில் எதிர்க்கட்சியாக உருவெடுக்கும் என்றும், துரை வைகோ மிக விரைவில் எதிர்க்கட்சித் தலைவராகும் காலம் வரும் என்றும் கூறினார்.