பதவி விலக மறுக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!

 

கடந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுக அடிமட்ட அளவில் மறுசீரமைப்பு செய்து, இளம் நிர்வாகிகளுக்குப் பொறுப்புகளை வழங்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிரமாகத் திட்டமிட்டு வரும் வேளையில், கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தனது பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துப் போர்க்கொடி தூக்கியுள்ளதாக அறிவாலய வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலில் ஏற்பட்ட அசுரத் தோல்வியைத் தொடர்ந்து, தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க, திமுகவிலும் மாற்றங்களைக் கொண்டு வர மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக வயதான மூத்த நிர்வாகிகள் தங்களின் பதவிகளைத் தியாகம் செய்து, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என அவர் விரும்புகிறார்.

கட்சியின் இந்த மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து துரைமுருகனை மாற்றிவிட்டு, அந்த இடத்திற்குப் புதிய உத்வேகம் கொண்ட ஒருவரை நியமிக்கத் தலைமை முற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்குத் துரைமுருகன் மிகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

கட்சியின் உயர்மட்ட ஆலோசனைகளின் போது துரைமுருகன் தனது நிலைப்பாட்டை மிகவும் கறாராகத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.  முந்தைய காலகட்டங்களில் பேராசியர் அன்பழகன் எவ்வாறு தனது இறுதி மூச்சு வரை திமுகவின் பொதுச்செயலாளர் பதவியில் நீடித்தாரோ, அதேபோலத் தானும் சாகும் வரை இதே பதவியில் நீடிக்க விரும்புவதாகவும், எக்காரணத்தைக் கொண்டும் பதவியைக் காலம் கடந்து விட்டுக்கொடுக்க முடியாது என்றும் அவர் அறிவாலயப் புள்ளிகளிடம் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

மிகவும் நெருக்கடியான இந்த அரசியல் சூழலில், கட்சியின் நீண்டகாலப் பயணத்திற்குத் துரைமுருகனின் இந்தப் பிடிவாதம் முட்டுகட்டையாக அமைந்திருப்பதால் மு.க.ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.