“திமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகளால் 4000 மெகாவாட் திட்டங்கள் முடங்கியது” - சோலார் சங்கத் தலைவர் சி. நரசிம்மன் குற்றச்சாட்டு!

 

திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் மற்றும் ஊழல் காரணங்களால் தமிழகத்தில் சுமார் 4,000 மெகாவாட் அளவிலான சூரிய மின்சக்தி திட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சோலார் சங்கத் தலைவர் சி. நரசிம்மன் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் நிலவிய நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் ஊழல் காரணமாக, தமிழகத்தில் வரவிருந்த 4,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடங்கியுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,750 மெகாவாட் சோலார் மின் உற்பத்தித் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட துணை மின்நிலையத்தைச் சட்டவிரோதமாக விற்பனை செய்துவிட்டதாகக் கடுமையான புகார் முன்வைக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற மின் கட்டமைப்பு முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, இந்தச் சோலார் திட்ட முறைகேடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதுடன், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துத் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

சூரிய மின்சக்தித் துறையில் முதலீடு செய்ய விரும்பும் புதிய முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள், மீண்டும் முறைப்படி விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன.