அதிகாலையில் துணிகரம்... தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் கழுத்தில் இருந்த 2 சவரன் பவுன் நகை பறிப்பு!

 

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி அமுதா (32). நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம் போல் அமுதா தனது வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததைப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், அமுதாவின் வீட்டிற்குள் நைசாக நுழைந்துள்ளனர். உறங்கிக் கொண்டிருந்த அமுதாவின் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை அந்த கும்பல் மின்னல் வேகத்தில் பறித்துள்ளது.

நகையைத் திருடியதோடு நிறுத்தாமல், வீட்டில் இருந்த விலை உயர்ந்த செல்போனையும் திருடிக்கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சங்கிலியைப் பறிக்கும்போது ஏற்பட்ட அதிர்ச்சியில் கண்விழித்த அமுதா, திருடர்கள் தப்பிச் செல்வதைக் கண்டு கூச்சலிட்டுள்ளார். ஆனால், அதற்குள் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சமீபகாலமாகச் சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளில்லாத வீடுகள் மற்றும் உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களைக் குறிவைத்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது போன்ற சம்பவங்களைத் தடுக்கப் போலீசார் இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.