அதிகாலையிலேயே விண்ணதிர்ந்த ‘அரோகரா’ கோஷம்.... திருச்செந்தூரில் கந்தசஷ்டி தொடங்கியது... நவ.15ல் சூரசம்ஹாரம்... விடிய விடிய குவிந்த பக்தர்கள்!

 

இன்று அதிகாலை திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் விடிய விடிய பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா இன்று நவம்பர் 10ம் தேதி அதிகாலை துவங்கியது. நவம்பர் 15ம் தேதி சூரசம்ஹாரமும் நவம்பர் 16ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.

இன்று கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதா் யாகசாலை புறப்பாடு நடைபெற்றது. அதனைத்  தொடா்ந்து யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது.

காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு யாகசாலையில் சுவாமிக்கு தீபாராதனை, தொடா்ந்து யாகசாலையில் இருந்து வள்ளி, தேவசேனா அம்மனுடன் சுவாமி ஜெயந்திநாதா் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தா்கள் வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்கள் பாட உள் பிரகாரம் வழியாக சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

பின்னா் திருவாவடுதுறை ஆதீனம் கந்த சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதா்க்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றதும் சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிப்பிரகாரம் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.

2ம் திருநாள் முதல் 5ம் திருநாள் வரை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தொடா்ந்து தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறும்.

சிகர நிகழ்ச்சியாக 6ம் திருநாளான நவ.15ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். மாலை 4.30 மணியளவில் கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள் நவ.16ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி மாலை நடைபெறும்.

கந்தசஷ்டி விரதத்தின் முதல் 5 நாட்களுக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. சூரசம்ஹாரம் நிகழ இருக்கும் நவம்பர் 15ம் தேதி பத்து லட்சம் பேரும், திருக்கல்யாணத்திற்கு இரண்டு லட்சம் பேரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

விழா நாட்களில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை, மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 18 இடங்களில் 1.30 லட்சம் சதுரடியில் நிழல் கொட்டகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் போது நாள் முழுதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. பொது தரிசன வரிசையில் இந்தாண்டு அடிப்படை வசதிகளுடன் 'கியூ காம்பிளக்ஸ்' அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கந்தசஷ்டி நிகழ்வுகளை பக்தர்கள் பார்க்க எல்.இ.டி., திரைகள் முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பராமரிக்க 400 துாய்மை பணியாளர்கள் உள்ளனர்.  திருச்செந்துாருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்செந்தூரில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.