எ.வ.வேலு இடங்களில் விடிய விடிய சோதனை... ரூ. 40 லட்சம் ரொக்கம், டிஜிட்டல் ஆதாரங்கள், முக்கிய ஆவணங்கள், பறிமுதல்!

 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 40 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று காலை 6 மணி முதல் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தொடங்கிய இந்தச் சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. சோதனையின் நிறைவில் லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் முக்கிய விபரங்கள் பின்வருமாறு:

சோதனையின் போது எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய இடங்களில் இருந்து முறையான கணக்கு ஆவணங்கள் இல்லாத ரூ. 40 லட்சம் ரொக்கப் பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தவிர, கணினிகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் மொபைல் போன்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களும், சொத்து ஆவணங்களும் லஞ்ச ஒழிப்புத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்த காலகட்டத்தில் நடைபெற்ற திட்டங்கள் குறித்து இந்தச் சோதனையில் மிக முக்கியக் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. "சங்கரானந்த் இன்ப்ரா" என்ற தனியார் நிறுவனத்திற்கு, எந்தவொரு களப்பணியையும் மேற்கொள்ளாத நிலையிலேயே விதிகளுக்குப் புறம்பாக ரூ. 3.23 கோடி நிதி விடுவிக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான டெண்டர் கோப்புகளும் அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் லஞ்ச ஒழிப்புத்துறை விரைவில் நேரில் ஆஜராகக் கோரி முறைப்படி சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிரடிப் பணப் பறிமுதல் மற்றும் முறைகேடு புகார்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது மேலும் உஷ்ணத்தைக் கூட்டியுள்ளன.