undefined

அலாஸ்காவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்... ரிக்டர் 6.3 ஆக அதிர்வு - சுனாமி எச்சரிக்கை இல்லை!

 

அலாஸ்காவின் ஆலூதியான் தீவுக்கூட்டத்தில் உள்ள நிக்கோல்ஸ்கி (Nikolski) கிராமத்திற்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இது 6.3 அலகுகளாக பதிவாகியுள்ளது.

நிக்கோல்ஸ்கி நகருக்குத் தென்மேற்கே சுமார் 57 மைல் தொலைவில், கடலுக்கு அடியில் வெறும் 1 கி.மீ (0.6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு மிகக் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அதன் அதிர்வுகள் அந்தப் பிராந்தியத்தில் மிகவும் வலுவாக உணரப்பட்டன. இந்த முக்கிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, நிக்கோல்ஸ்கி மற்றும் தெற்கு கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் முறையே 3.4 மற்றும் 3.5 ரிக்டர் அளவில் சிறு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கம் மக்கள் நடமாட்டம் குறைந்த தீவுப் பகுதியில் ஏற்பட்டதால், உயிர்ச் சேதமோ அல்லது பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் இதற்கு 'பச்சை எச்சரிக்கை' விடுத்துள்ளது, அதாவது உயிரிழப்புகள் மற்றும் நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவில் இது போன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இன்றைய 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சமீபத்திய நாட்களில் ஏற்பட்டவற்றில் சற்றே வலிமையானது எனக் கருதப்படுகிறது.