"கங்கையில் பிரியாணி சாப்பிட்டது குற்றமல்ல" - 14 பேர் சிறையிலடைக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம்!
கங்கை நதியில் பிரியாணி சாப்பிட்டதற்காக 14 பேர் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வாரணாசி கங்கை நதியில் ரமலான் நோன்பு துறப்பதற்காகப் படகில் சென்ற சிலர் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு, எலும்புகளை ஆற்றில் வீசி மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி 14 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். வாரணாசி உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், கடந்த மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் இது குறித்து தெரிவித்த கருத்துகளின்படி, கங்கை நதியில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதைத் தடை செய்ய நாட்டில் எந்தவொரு சட்டமும் இல்லை என்றும், பிரியாணி சாப்பிடுவது ஒருபோதும் குற்றமாக முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குற்றம் அல்லாத ஒரு செயலுக்காக 14 பேரைக் கைது செய்து 3 மாதங்கள் வரை ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைத்து வைத்தது மிகவும் வேதனையளிக்கிறது எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
நாட்டில் அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதும், அமைதியான முறையில் போராடுவதும் மற்றும் தங்களுக்கு விருப்பமான உணவை உண்பதும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமை என அவர் வலியுறுத்தினார்.