மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல்!

 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து முக்கியத் தரவுகள் அடங்கிய கணினி ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. நிலக்கரி கொள்முதல், ஒப்பந்தங்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் தொடர்பான ரகசிய விவரங்கள் அடங்கிய இந்த ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது மின்வாரிய வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகள் தரப்பில் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் முறைப்படி புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்த புகார்களின் அடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்த கோபிநாத் என்பவருக்கு இந்த திருட்டுச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் கோபிநாத்தை அதிரடியாகக் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட கோபிநாத் அளித்த தகவலின் பேரில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட 34 ஹார்டு டிஸ்க்குகளையும் காவல் துறையினர் பத்திரமாகப் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக இருந்த இந்த திருட்டு வழக்கில், ஹார்டு டிஸ்க்குகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது மின்வாரிய நிர்வாகத்திற்கு நிம்மதியை அளித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.